தமிழ் தேசியம்

தமிழ் தேசியம்! இந்த ஒரு பொருள் தரும் இரு சொற்களை இரண்டாகவே நாம் சிந்திக்க வேண்டும்.முதலில், தமிழ் - தமிழ் வாழ்ந்த காலம் மிகவும் தொன்மையானது. தற்போதைய மனித அறிவின்படி, ஏறத்தாழ 2500-3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மொழி வாழ்ந்த இடம் அரேபிய மற்றும் வங்க கடல்களின் இடையில் உருவெடுத்த நிலம். இதன் தொன்மையை இன்னும் ஆராய்ச்சி செய்து, ஆணிவேரினை நோக்கி பயணித்தால், இந்த நிலத்தை தாண்டி வேறொரு பெருநிலம் தமிழின் பிறப்பிடமாக புலப்படும். இவளவு பழமை வாய்ந்த மொழி இந்த நவீன யுகத்திலும் பொலிவோடு வாழ்ந்து வருவது ஒரு தனி சிறப்பே. காலத்தின் பிடியில் வாழ்ந்த மனிதன், காலத்தை போலவே நிலையின்றி மாறி வந்தான். அவனைப்போலவே அவன் பயன்படுத்திய மொழியும் மாறியது. சங்ககாலத்தின் தமிழ் சிறிதளவு மட்டுமே இன்று பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் நெடுங்காலமாக மனிதன் இந்த மொழியை விடாமல் பேசி, எழுதி, இசைத்து வந்துள்ளான். அறிந்தோ அறியாமலோ இம்மொழி காலங்கடந்து வாழ்ந்து வந்தது.

தமிழ் என்று பேசும்பொழுது, தமிழ் வழி வந்த மரபை பிரித்து பார்க்க முடியாது. தமிழில் இயற்றப்பட்ட நூல்கள், கவிதைகள் மேலும் அதன் வழி வந்த சிந்தனைகள் ஏராளம். அதன் விளிம்பை மட்டுமே ருசித்து இன்று தமிழின் பெருமையை உரக்க பறைசாற்றுகிறேன். மரபு என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்படுகிறது. கலாச்சாரம் - இந்த வார்த்தையை பிரித்து அர்த்தம் தெரிந்துகொண்டோமே அனால், இவ்வாறு புரிந்து கொள்ளலாம் - கலைகளின் சாரம் தான் கலாச்சாரம். எனது நண்பன் இன்று காலை சொடுக்கிய ஒரு தகவல் - ஆங்கில வார்த்தையான CULTURE ஆணிவேரான தமிழில் இருந்து மருவிய வார்த்தை. சிந்தித்து பாருங்கள் விளங்கலாம்.ஒரு எடுத்துக்காட்டு: திருக்குறள் இயற்ற பட்ட வருடம் '300 BCE' - குத்துமதிப்பாக 2300 வருடங்கள் முன்பு மூன்றாவது சங்க காலத்தின் படைப்புகளில் ஒன்றாக திகழ்ந்தது. அதாவது மூன்றாவது சங்க காலத்தின் இறுதியில்  திருக்குறள் என்றொரு உலக பொதுமறை உருவெடுத்தது தமிழகத்தில். திருக்குறளை படித்தோருக்கு அல்லது அறிந்தோருக்கு விளங்கும் அதன் சாரம் மனிதனின் அத்துணை செயல்களுக்கும், சிந்தனைகளுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்ததென்று. சற்றே இதை கற்பனை செய்து தான் பாருங்களேன். ஏசுவும் அல்லாவும் தோன்றாத காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த மனிதன், தமிழ் வழி சிந்தனை வாய்ந்த மனிதன், மனிதத்தை பற்றி நூல் இயற்றுகிறான். இன்னும் சில பல வருடங்கள் பின்னே செல்வோம். திருக்குறள் போல் ஒரு நூலை இயற்ற வேண்டும் அனால், அந்த மனிதன் வாழ்ந்த சமூகம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? ஒரு நிலையான வாழ்வுமுறை அமையப்பெற்ற சமூகமே வள்ளுவனை உருவாகியிருக்க முடியும். மூன்றாவது சங்க காலத்தின் படைப்பு திருக்குறள் என்றால், முதலாவது மற்றும் இரண்டாவது சங்க காலங்கள் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? மொழியில் விளையாடி, கலைகளில் அற்புதங்கள் படைத்த ஒரு சமூகம் இந்திய பெருகண்டத்தில் 1000 BCE அதாவது 3000 சொச்சம் வருடங்களுக்கு முன் இருந்தது. அந்த சமூகம் தமிழ் வழி வளர்ந்து வாழ்ந்து வந்தது. அந்த மொழி தான் இன்றும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகிறது.

3000 வருடங்கள் என்பது சாதாரண கால அளவல்ல. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் வயது வெறும் 70 ஆண்டுகள் மட்டுமே. ஆங்கிலேயன் இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அந்த 70 ஆண்டுகளில் இருந்து ஒரு 200-300 ஆண்டுகள் முன்னதாக. 3000 வருடங்கள் எங்கே, 370 வருடங்கள் எங்கே?

3000 திறக்கும் மேல் வருடங்களாக வாழ்ந்து வந்த மொழி தனது அடையாளங்களை அவ்வளவு சீக்கிரம் இழந்துவிடாது. எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன இந்த இடைப்பட்ட காலத்தில். இருப்பினும் அனைத்திற்கும் தொடர்பாக விளங்கியதோ இந்த தமிழ் மொழி. இன்னும் வரலாற்றின் பாலமாக விளங்குகிறது தமிழ். தமிழ் வாழவேண்டும் என்று எதற்க்காக சான்றோர்கள் கூறினர் என்பது இப்பொழுது சற்றே விளங்கலாம்.

ஆக, தமிழகம் ஒரு முழு நிறைவு பெற்ற  நாடாகவே திகழ்ந்து வந்தது. இன்றும் கூட, இந்தியா என்னும் கூட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதன்மை பெற்று விளங்குகிறது.

எப்படி தமிழ் தன்னை காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டதோ, அதே போல், மனிதர்களாகிய நாமும் கால மாறுதல்களுக்கு வழிவகுத்தே வாழ வேண்டும். வழி வகுப்பது என்றால் உரிமைகளை துறப்பதல்ல. முற்றிலும் தனிநாடாக பிரிய வேண்டும் என்பது பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும். இந்த தொலைத்தொடர்பு யுகத்தில், தமிழை எவ்வாறு இணைக்கப்போகிறோம் என்று தான் நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தலே தமிழின் வாழ்வை மேலும் வளம்பெற செய்யும். பிரிவினை என்பது எங்கு தோன்றினாலும், அதன் விளைவாக நன்மை மிகவும் சிறியதாகவே இருக்கும், குறுகிய காலத்தில் பின்னடைவு மட்டுமே இருக்கும். சேர்தலிலே இன்பம்! தொலைத்தொடர்பு மேலும் வளர்ந்து வரும் இந்த காலத்தில், பிரிந்து செல்கிறேன் என்பது தீர்வாகாது. இணைவோம், அனால் நமது உரிமைகளுடன் இணைவோம். இந்தியா என்னும் கூட்டமைப்பின் ஒரு பாகமாக தமிழகம் இருக்கட்டும். தமிழ் வாழ, வளம்பெற இதுவே சிறந்த வழி.

இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு என்பதைவிட, தமிழ்நாடு இந்தியாவின் கூட்டமைப்பில் ஒரு நாடு என்று புரிந்துகொள்வோம். தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமிழ்வழி கல்வி, தமிழ்வழி மரபு இக்காலத்திற்கு ஏர்பார்போல் கற்றுகொடுப்போம். தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிந்துகொள்வோம், புரிந்துகொள்வோம். தமிழ்வழி ஆன்மிகம் பயில்வோம். கலை இயற்றுவோம். அறிவியல் பயில்வோம். ஆங்கிலமும் பயில்வோம். பன்மொழி பயில வழி வகுப்போம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவோம். சமசீர் நோக்கியே பயணிப்போம். இந்தியா என்னும் கூட்டமைப்பில் பொருந்த வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்ப்போம். தனித்து, சிறந்து விளங்குவோம். நம் மொழியின் தனித்துவத்தையும், அழகையும் போற்றுவோம்.

தமிழ்நாடு என்பது, தமிழ் வாழும் வரை தனி நாடாகவே திகழும். எந்த மாற்றம் வந்தாலும் சரி, தமிழ் மொழி தமிழன் நாவில் ஆட்சி புரியும் வரை, தமிழ்நாடென்று ஒன்று வாழும். உலகின் கடைசி தமிழன் வாழும் வரை இது பொருந்தும்.

இம்மொழி பேசும் அனைவரையும் இணைப்பது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்தனைகளை தாங்கி பயணிக்கும் 'தமிழ்' மட்டுமே. வாழ்க தமிழ். வாழ்க மனிதம்.

Popular posts from this blog

What To Do When You Lose Your ATM Card IOB (Indian Overseas Bank)

How to get a Canadian Driver's License - Tips for Indian International Students

Visiting Canada in Winter from India - Some Interesting Information & Tips