Hinduism - இந்து மதம் பற்றிய எனது பார்வை

இந்து மதத்தின் சிறப்பம்சமே நாத்திகன் கூட இந்துவாக இருக்கலாம் என்பது தான். அனால் இப்பொழுதோ இந்து மதத்தையும் இந்துக்களையும் காப்பற்றுகிறோம் என்று சில பல கும்பல்கள் படை எடுத்து வருகின்றன.
பொதுவாகவே வெகுஜன மக்கள் பலர் எந்த கட்சியையும் அல்லது கொள்கையையும் சார்ந்து இருப்பதில்லை. மாட்டுக்கறி தின்ற சிலரை சிலர் கட்டி வைத்து அடித்த பொது, எனக்கென்ன நான் மாட்டுக்கறி தின்பதில்லை ஆகையால் எனக்கு இது ஒரு பிரச்னை இல்லை என்று ஒதுக்கிவிடுகிறார்கள்! இது மிகவும் தவறான போக்காகும். இவ்வாறு சிந்தனை கூட செய்யாமல் அலட்சியமாக விடுவதே நமது பெருங்குற்றமாகும். பின்பொரு காலத்தில் நிச்சயம் இப்படி ஒரு கும்பல் நம்மையும் கொரவளியை நெருக்கி கேள்வி கேக்கும் - அப்போது கதறி பிரயோஜனம் இல்லை! சரி எது தவறெது என்று கூர்ந்து ஆராய்ந்து நாம் அறியவேண்டும்.
இந்த மதத்தை காட்கும் கும்பல்கள் என்னவென்று செய்தி பார்ப்போர்களுக்கும், நாட்டு நடப்பு அறிந்தோருக்கும் நன்கு தெரியும். பல வருடங்களாக அமைதி காத்த பல இந்துக்கள் இப்பொழுது வெகுண்டெழுகின்றனர். அந்த அமைதியில் நடந்தேறிய அதேதான் இந்த கொடூரத்திலும் நடந்தேறும். மதம் வாழவேண்டும் என்று கத்தியை எவன் ஒருவன் எடுக்கிறானோ அன்றே அந்த மதம் தனது சரிவின் பாதையை நோக்கிய பயணத்தை தொடர்ந்தது என்று நாம் அறிந்துகொள்ளலாம்!இந்து மதம் பற்றி சற்று பேசுவோம். இந்து என்றால் என்ன? மோதலில் அந்த வார்த்தையை புரிந்துகொள்ள முயற்சிப்போம். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கு அப்பால் இருந்த நாகரீகத்தை குறிக்க பெர்சியர்களால் (Persians) பயன்படுத்தப்பட்ட வார்த்தை. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, மொஹம்மதும் ஏசுவும் இந்த நிலத்திற்குள் புகாத காலங்களில், இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களுக்கு வேறு மதம் இருப்பதே தெரியாது. இதை அவர்கள் மதமாக கூட பார்க்கவில்லை. ஆகவே தான் இந்து என்னும் வார்த்தை, இந்த மண்ணில் வாழும் அனைவரையும் குறிக்கும் சொல்லாகும். இதற்க்கு சாயம் பூசி கலப்படம் செய்து இப்பொழுது இந்து மதமாக உருவெடுத்து நிற்கிறது. இப்பொழுது தாழ்ந்தே நிற்கும் இந்த மதத்திற்கு முன்பு இருந்த பொலிவோ, பெருமையோ கிடையாது. இம்மண்ணில் வாழ்ந்த எத்தனையோ ஞானிகள் சேர்ந்து கட்டமைத்த வழக்கங்கள் தான் நாம் இப்பொழுதும் சிறிதளவு பயன்படுத்தி வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை. முன்பு கூறியதை போல, நாத்திகனாக இருக்க கூட அனுமதிக்கும் ஒரு வழக்கம் இந்த மண்ணின் வாழ்க்கை முறையாகும். அவ்வாறே இஸ்லாமும் கிறிஸ்துவும் நுழைந்த பொழுது, அவரவர் எண்ணம் போல் செயல்பட்டு பிற மதங்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்கள் மாறினர். இந்தியாவில் மட்டும் தான் இந்த அளவிற்கு பிற மாதங்கள் ஊடுருவி உள்ளன. இதில் கவலை படுவதற்கும் வருத்தப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருந்த ஒரு கலாச்சாரம் நமதாகும். அந்த சுதந்தரத்தினால் தான் இத்துணை பிற மத மக்கள் நம் நாட்டில் உள்ளனர். காலத்தின் விளையாட்டு மிகவும் அற்புதமானது. முன்பு ஒரு காலத்தில் அனைவருமே இந்துக்களாக இருந்தனர் அனால் இப்பொழுது இந்தியாவில் இருந்துகொண்டே பிற மதங்களை வைத்து தங்களை அடையாளம் காண்பித்து கொள்கின்றனர். என்னதான் தன்னை மாற்றி அடையாளப்படுத்திக் கொண்டாலும், இந்து என்பது இந்த நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் குறிக்கும் பெயர். ஆகவே, இந்த மண்ணில் வாழும் அனைவரும் இந்துக்கள் தான். இதில் எந்த பெருமையும் கிடையாது, எந்த லட்சியமும் கிடையாது, எந்த கொள்கையும் கிடையாது.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் - இந்த நிலத்தில் வாழும் நாம் அனைவருமே இந்துக்கள் தான். உதாரணத்திற்கு, நான் ஆத்திகனும் அல்ல, நாத்திகனும் அல்ல - மத குருக்கள் விளக்கும் இறைவனை நான் நம்புவதில்லை, இறைவன் என்று ஒன்று இல்லை என்பதையும் நான் நம்புவதில்லை. நடுவில் குழம்பி போய், கேள்விக்கு விடை அறியாமல் தேடும் ஒரு வேட்டை காரன் நான். இவ்வாறு இருக்கும் நானும் ஒரு இந்து தான், இயேசுவை வழிபடும் நீயும் ஒரு இந்துதான்! இப்பொழுது நிலப்பரப்பில் குறைந்து விளங்கும் இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான்.
இப்போது தான் எனக்கு பெரிய கேள்வி ஒன்று எழுகின்றது. மேலே நாம் பேசியே மதம் காக்கும் கும்பல்களுக்கு என்ன வேலை? இந்த மண்ணில் பிறந்தவர்களை காப்பாற்றுவதா இல்லை ஒரு கற்பனை கருவியான இந்து மதத்தை காப்பாற்றுவதா? சிந்தியுங்கள் நண்பர்களே. மனிதர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்தும் எதையும் ஆதரிக்கர்த்தீர்கள். எங்கே ஒருவன் ஒரே இனமான மனித இனத்தை மொழியாலும், மதத்தாலும், வாழ்க்கை முறையாலும், பால் குறியீடாலும், பாலியல் நோக்குநிலையாலும், மேலும் பல வகைகளில் பிளவுபடுத்த முற்படுகிறானோ, அவன் செய்வது தவறு என்று எண்ணும் நிலை வர வேண்டும். அவ்வாறு எண்ணம் தோன்றினால் மட்டுமே நாம் நம் மனித இனத்துடன் மகிழ்வோடு வாழ முடியும்.

Popular posts from this blog

What To Do When You Lose Your ATM Card IOB (Indian Overseas Bank)

How to get a Canadian Driver's License - Tips for Indian International Students

Visiting Canada in Winter from India - Some Interesting Information & Tips